காஜாங், பிப்ரவரி.05-
தனது முன்னாள் காதலியைக் கொலை செய்ய முயன்றது மற்றும் அவரது காரை பெட்ரோல் ஊற்றி எரித்தது தொடர்பில் ஓர் இந்திய நபர் காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
மருத்துவ ஆய்வக அதிகாரியான 42 வயது எஸ். பார்த்திபன் என்பவர், மாஜிஸ்திரேட் கைனுர் அலீஸா இஸ்மாயில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 30-ஆம் தேதி மதியம் சுமார் 3.20 மணியளவில், பண்டார் டெக்னாலஜி காஜாங்கில் உள்ள ஒரு வீட்டில் 43 வயதான தனது முன்னாள் காதலி மீது பெட்ரோல் ஊற்றி, எரியூட்ட முயற்சி செய்ததாக பார்த்திபன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில் அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான புரோட்டோன் சாகா கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக பார்த்திபன் மீது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பார்த்திபன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து பார்த்திபன் விசாரணை கோரியதால் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 16 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
முன்னதாக விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட பெண்ணுடன் 5 வருடங்கள் உறவில் இருந்ததாகவும், சம்பவத்தன்று உணர்ச்சி வசப்பட்டு இந்தச் செயலைச் செய்ததாகவும், தம்முடைய செயலில் உள்நோக்கம் இல்லை என்று குறிப்பிட்டார்.
அதே வேளையில் தனது முதல் திருமணத்தின் மூலம் பிறந்த ஒன்பது வயது மகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பில் தாம் இருப்பதாக தனது கருணை மனுவில் பார்த்திபன் தெரிவித்தார். வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.








