May 5, 2026
Thisaigal NewsYouTube
3 மில்லியன் ரிங்கிட் மோசடி: பாலியல் மிரட்டல் கும்பலை முறியடித்தது போலீஸ்
தற்போதைய செய்திகள்

3 மில்லியன் ரிங்கிட் மோசடி: பாலியல் மிரட்டல் கும்பலை முறியடித்தது போலீஸ்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.10-

ஆன்லைன் வழியாகப் பாலியல் ரீதியாக மிரட்டி , 3 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான இழப்புகளை ஏற்படுத்திய கும்பலை, கடந்த மாதம் ஜோகூரில் நடத்திய அதிரடி சோதனையின் மூலம் போலீசார் முறியடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 15-ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் 18 முதல் 33 வயதுக்குட்பட்ட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார். இருப்பினும், இந்தக் கும்பலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் 23 வயது மலேசியர் இன்னும் பிடிபடவில்லை.

இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காலிட், இந்த கும்பல் 2024 முதல் சமூக ஊடகங்களில் பெண்கள் போல நடித்து பலரை ஏமாற்றி வந்ததாகக் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு phishing இணைப்புகள் அனுப்பப்பட்டு, அவர்களின் கைப்பேசிகளில் ஊடுருவி, அவர்கள் எடுத்துக் கொண்ட ஆபாச வீடியோக்களை வைத்தே அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர் என்று ஜஜிபி அவர் விளக்கினார்.

மேலும், இந்தக் கும்பல் மலேசியர்களை லாவோஸ் மற்றும் கம்போடியாவில் உள்ள மோசடி கும்பல்களில் வேலைக்குச் சேர்த்து, மனித கடத்தல் தொழிலிலும் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் அவர்களின் அடையாள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மோசடி வேலையை விட்டு வெளியேற விரும்பினால் 30 ஆயிரம் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் மிரட்டப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் ஏற்கனவே மனித கடத்தல், சிறார் ஆபாசப் படங்கள் தயாரித்தல் மற்றும் கும்பல் கொள்ளை போன்ற குற்றப் பின்னணிகள் உள்ளன. இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

இந்தக் கும்பலின் தலைவன் உட்பட மேலும் ஐவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாக டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related News