அம்பாங் ஜெயா, பிப்ரவரி.21-
அம்பாங், ஜாலான் பண்டான் பிரிமா பகுதியில் லாட்டரி சீட்டுப் பரிசுப் பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, 70 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரிடமிருந்து 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான நகைகளை மர்ம கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது. புள்ளிவிவரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அந்தப் பெண்மணி, கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இந்தச் சம்பவத்தில் சிக்கியுள்ளார்.
அம்பாங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி கைருல் அனுவார் காலிட் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்மணி ஒரு பல்பொருள் அங்காடியில் இருந்த போது, அவரை ஒரு தம்பதியர் மற்றும் ஓர் இந்தோனேசியப் பெண் என மூவர் அணுகியுள்ளனர். தங்களிடம் 3 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள லாட்டரி சீட்டு இருப்பதாகவும், தங்களிடம் அடையாள அட்டை இல்லாததால் அதனைப் பணமாக மாற்ற உதவி செய்யுமாறும் அவர்கள் கேட்டுள்ளனர். இதற்குப் பதிலாகப் பெரும் தொகையைப் வெகுமதியாகத் தருவதாகவும் ஆசை காட்டியுள்ளனர் என்றார்.
அந்த இந்தோனேசியப் பெண் பாதிக்கப்பட்டவரைத் தொட்டவுடன், அவர் ஒருவித 'மந்திரக் கட்டிற்கு' ஆளானது போன்ற உணர்வைப் பெற்று, அவர்களுக்கு உதவச் சம்மதித்துள்ளார். பின்னர், ஒரு புரோட்டான் வாஜா காரில் அவரைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்ற அந்த கும்பல், லாட்டரி சீட்டு காசோலையாக மாற்றப்பட்டு விட்டதாகக் கூறி நம்ப வைத்துள்ளது.
அந்தப் பெண்மணி தப்பித்துவிட மாட்டார் என்பதற்கு உத்தரவாதமாக 30 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் தொகை கேட்ட நிலையில், அவரிடம் பணம் இல்லாததால் தனது 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான நகைகளை அவர்களிடம் ஒப்படைத்து ஏமாந்துள்ளார் என்று ஏசிபி கைருல் தெரிவித்துள்ளார்.








