கோலாலம்பூர், நவம்பர்.25-
நாட்டின் முன்னாள் தேசிய வூஷு தற்காப்புக் கலைப் பயிற்றுநர் ஒருவர் மீது அம்பாங் செஷன்ஸ் நீதின்றத்தில் நேற்று பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தனது வழக்கறிஞர் சிவநந்தனுடன் நீதிமன்றத்திற்கு வந்த 49 வயது சியா கியான் கியோ என்ற அந்த முன்னாள் பயிற்றுநர், தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட 15 வயது இளம் வீராங்கனையைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கடந்த 2021 ஆம் ஆண்டுக்கும் 2022 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பத்துகேவ்ஸ், வூஷு தற்காப்புக் கலைப் பயிற்சி மையத்தில் அந்த முன்னாள் பயிற்றுநர் இக்குற்றத்தைப் புரிந்தாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் சட்டத்தின் கீழ் அந்த முன்னாள் பயிற்றுநர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 15 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிபதி நோர்ஷீலா கமாருடின் அனுமதி அளித்தார்.
இவ்வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.








