Sep 28, 2026
Thisaigal NewsYouTube
மேரு போலீஸ் நிலையத்தில் மோதல்: 3 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மேரு போலீஸ் நிலையத்தில் மோதல்: 3 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

கிள்ளான், மார்ச்.06-

கடந்த மார்ச் 2-ஆம் தேதி கிள்ளான் மேரு, போலீஸ் நிலையத்தில் மோதலில் ஈடுபட்டது, காயத்தை ஏற்படுத்தியது மற்றும் அரசு சொத்துக்களைச் சேதப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று இந்திய ஆடவர்கள் கிள்ளான், மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

39 வயது பி.கோபிநாத், 38 வயது பி. கலையரசன் மற்றும் 44 வயது ஏ. மகேந்திரன் ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஆவர். மாஜிஸ்திரேட் அஸிலா மாட் முன்னிலையில் அந்த மூவரும் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 2, இரவு 9.47 மணியளவில் மேரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய வந்த நபரை ஹெல்மெட் மற்றும் இரும்புத் தடியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக இம்மூவர் மீதும் முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பிற்கு அரணாக விளங்கும் போலீஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியது உட்பட அராஜக செயல் புரிந்ததாக இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் பத்தாண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்கள் புரிந்த அராஜகச் செயல் தொடர்பான காணொணி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News