மறைந்த டச்சு மாடல் இவானா ஸ்மித்தின் மரணத்தை விசாரிப்பதில் மலேசிய போலீஸ் துறை அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி, அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
2017-ல் நிகழ்ந்த இவானா ஸ்மித்வின் மரணம் தொடர்பான விசாரணையில் குறைபாடுகள் இருந்ததாகக் கூறி, கடந்த 2025 ஜூலை 29 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், அந்த மாடல் அழகியின் குடும்பத்திற்கு அரசாங்கம் 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி முகமது ஜைனி மஸ்லான் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசிக்க வேண்டியுள்ளதால் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
முன்னதாக, இந்த மேல்முறையீடு முடியும் வரை இவானா ஸ்மித் குடும்பத்திற்கு அரசாங்கம் இழப்பீட்டுத் தொகையை வழங்க இடைக்காலத் தடையுத்தரவை நீதிமன்றம் பிறப்பித்து இருந்தது.








