பெங்களூரு, ஜூலை.15-
பழம் பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை 11:30 மணி வரை, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் சரோஜா தேவியின் சொந்த ஊரான ராம்நகர், சென்னப்பட்டணாவின், தஷாவரா கிராமத்தில், ஒக்கலிகர் சம்பிரதாயப்படி இறுதிச் சடங்குகள் நடந்தன.
இதற்காக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழி நெடுக ரசிகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மல்லேஸ்வரம் அருகே கொடிஹள்ளி தோட்டத்தில் அவரது கணவரின் கல்லறைக்கு அருகே துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சரோஜா தேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கலந்து கொண்டார். மேலும் திரையுலகைச் சேர்ந்த ராக்லைன் வெங்கடேஷ், ஜெயமாலா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.








