ஷா ஆலாம், நவம்பர்.28-
வெப்பமண்டல Senyar புயல் காரணமாக, கனமழையும், பலத்த காற்றும் தொடரும் என்பதால், அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு, தயார் நிலையில் இருப்பதாக சிலாங்கூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிலாங்கூரில் 1,173 தற்காலிக நிவாரண மையங்கள் இருப்பதால், நீர் மட்டம் உயர்ந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால், நிவாரண மையங்களில் மொத்தம் 244,000 பேரைத் தங்க வைக்க முடியும் என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருரின் ஷாரி குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில், பள்ளிகள், மசூதிகள், சமூக அரங்குகள் மற்றும் கிராம அரங்குகள் ஆகியவை அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இவை அனைத்தும் அத்தியாவசியப் பொருட்களுடன் தயார் நிலையில் இருப்பதாகவும் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.








