கோலாலம்பூர், செப்டம்பர்.23-
மக்கள் தங்கள் மைகாட் அட்டையைப் பயன்படுத்தி, உதவித் தொகைக்குரிய பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து ஏற்பாடுகளும் போதுமானவையாகும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்தார்.
ஏனெனில், அனைத்து எண்ணெய் நிலையங்களும் தங்கள் பெட்ரோல் நிலையங்களில் உள்ள இயந்திரங்கள் மற்றும் பெட்ரோல் பம்புகளில் உள்ள அமைப்பு முறைகளைச் சீரமைத்துக் கொண்டு, அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்த தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
உதவித் தொகைக்குரிய பெட்ரோல் திட்டத்தை அரசாங்கம் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது. ஆனால் அதனை செயல்படுத்துவதற்கான அனுமதி, ஏன் தாமதமாகக் கிடைத்தது என்று பலர் கேட்கலாம்.
இருப்பினும் இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றால், செயல்படுத்தப்படும் திட்டம், எந்தவோர் இடையூறின்றி சுமூகமாக நடைபெற வேண்டும். அந்த வகையில் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.








