கோலாலம்பூர், ஜூலை.25-
மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி மற்றும் பிரசாரானா ரயில் நிலையங்கள் உட்பட அனைத்துப் பொது போக்குவரத்தும் நாளை சனிக்கிழமை வழக்கம் போல் செயல்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் எதிர்க்கட்சியினர் பேரணி ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்ட போதிலும் பொது போக்குவரத்து வழக்கம் போல் செயல்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் உடன்படாதவர்கள் உட்பட பேரணியில் கலந்து கொள்கின்றவர்களின் சுதந்திர உரிமையை மடானி அரசாங்கம் பாதுகாக்கிறது என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
எனினும் அன்றாடம் தங்கள் பணிகளை மேற்கொள்கின்ற பெரும்பாலான மக்களுக்கு பொது போக்குவரத்துச் சேவை தொடர்ந்து செயல்படுவது முக்கியமாகும். அவர்களுக்கு இந்தப் பேரணி ஓர் இடையூறாக இருக்கக்கூடாது என்று அந்தோணி லோக் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக துருன் அன்வார் என்ற பேரணியில் 5 லட்சம் முதல் 10 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
அதே வேளையில் இந்தப் பேரணி தொடர்பில் 60 க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அரச மலேசிய போலீஸ் படை தெரிவித்துள்ளது.








