கோலாலம்பூர், டிசம்பர்.18-
மலாக்கா டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக ஊகங்களைத் தவிர்க்குமாறு சட்டத்துறை அலுவலகமான ஏஜிசி விடுத்த கோரிக்கையை வழக்கறிஞர்கள் ராஜேஸ் நாகராஜன் மற்றும் Sachpreetraj Singh ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பொதுமக்களின் தீவிர அழுத்தம் மற்றும் விவாதங்களுக்குப் பிறகே இந்த வழக்கு 'கொலை' சட்டப் பிரிவான குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் மறுவகைப்படுத்தப்பட்டது என்று அவ்விரு கிரிமினல் வழக்கறிஞர்களும் சட்டத்துறை அலுவகத்திற்குச் சுட்டிக் காட்டினார்.
இத்தகையச் சூழலில், பொதுமக்களின் ஆய்வையும் விவாதங்களையும் மௌனமாக்க ஏஜிசி முயற்சிப்பது தவறானது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதுதான் ஏஜிசி-யின் கடமையே தவிர, அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படும் போது அது குறித்த பொது விவாதங்களைத் தடுப்பது அல்ல என்று வழக்கறிஞர் ராஜேஸ் வாதிட்டார்.
மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தை ஆரம்பத்தில் 'கொலை முயற்சி' என குற்றவியல் பிரிவு 307 என விசாரித்தது முற்றிலும் தர்க்கமற்றது. இதனை ஏஜிசி ஒப்புக் கொள்ள வேண்டும் என ராஜேஸ் வலியுறுத்தினார்.
மலாக்கா மாநில போலீஸ் தலைவர் பொதுவெளியில் அறிக்கைகளை விடுவது விசாரணையின் நேர்மையைப் பாதிக்கும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ராஜேஸ் ஏஜிசி- க்கு இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.








