Oct 5, 2026
Thisaigal NewsYouTube

உண்மையை மறைக்க நண்பரின் சடலத்தை 300 கிலோ மீட்டர் தூரம் வரை கொண்டுச் சென்ற கும்பல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உண்மையை மறைக்க நண்பரின் சடலத்தை 300 கிலோ மீட்டர் தூரம் வரை கொண்டுச் சென்ற கும்பல்

ஈப்போ, செப்டம்பர்.30-

நடந்த உண்மையை மறைப்பதற்காக நண்பர் ஒருவரின் சடலத்தை சிலாங்கூர் பத்துகேவ்ஸிலிருந்து பேரா, பாகான் செராய், செமாங்கோல், கம்போங் செலாமாட் வரை கொண்டுச் சென்ற கும்பல் ஒன்றின் ஏமாற்று வேலையைப் போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.

உடலில் பின்புறம் மூன்று துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் 43 வயதுடைய தனது நண்பரின் சடலத்தை அந்த கும்பல் செப்பனிடப்படாத சாலை ஒன்றின் ஓரத்தில் கைவிட்டுச் சென்றுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை, பத்துகேவ்ஸ் வட்டாரத்தில் ஒரு காட்டுப் பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட ஐந்து நண்பர்களில் ஒருவர், விலங்கு என்று நினைத்து துப்பாக்கியால் சுட்ட போது, அந்த குண்டு அவரின் நண்பரின் முதுகில் பாய்ந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை மறைப்பதற்காக தனது நண்பரின் சடலத்தை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு 300 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் ஒரு பாதையில் கைவிட்டு நால்வர் தப்பித்து விட்டனர். எனினும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கொடுத்த தகவலின் பேரின் போலீசார் அந்த ஆடவரின் சடலத்தை மீட்டதாக டத்தோ நோர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கம்போங் செலாமாட்டைச் சேர்ந்த 32, 33 வயது இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 36 வயதுடைய மேலும் ஒருவர் பத்துகேவ்ஸ் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களுடன் இருந்த மேலும் ஒரு நபரைப் போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த நபரின் உடல் சவப் பரிசோதனைக்காக தைப்பிங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →