கோலாலம்பூரின் பல பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கு, வழக்கத்தைவிட ஐந்து மடங்குக்கும் அதிகமான கனமழையே காரணம் என்று கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோ ஶ்ரீ ஃபாட்லுன் மாக் உஜுட் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், அம்பாங், கிளாங் கேட்ஸ் அணை மற்றும் லெம்பா கெராமாட் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குறிப்பாக அதிக மழை பதிவானதாக அவர் கூறினார்.

மாலை 5.30 மணி நிலவரப்படி, லெம்பா கெராமாட்டில் 155.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக அங்கு 30 மில்லிமீட்டர் மழையே பதிவாகும்.
இன்று புத்ராஜெயாவில் கூட்டரசு பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ பண்டார், இவ்விவரத்தை கூறினார்.
இந்தக் கனமழையால் அம்பாங், தாமான் யூத்தான் மற்றும் ஜாலான் அம்பாங் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.








