ஷா ஆலாம், அக்டோபர்.03-
வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் தொடங்கப்படவிருக்கும் வேளையில் இஸ்ரேல் இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23 மலேசியர்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு சிறப்பு மக்களவைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த 23 மலேசியர்களை மீட்பதற்கு அரசாங்கம் எடுக்கக்கூடிய முடிவானது, மலேசிய மக்களைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலமாக அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற கொறடாவான தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார். யூத இராணுவத்தின் இந்த தன்மூப்பான நடவடிக்கை, அனைத்துலக சட்டங்களை மீறியச் செயலாகும். இது ஜெனிவா மாநாட்டு ஒப்பந்தத்திற்கு முரணானதாகும்.
அனைத்துலக மாநாட்டு ஒப்பந்தத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உலகளாவிய மனிதநேய முயற்சிக்கு இது ஓர் இழுக்காகும். எனவே இந்த விவகாரம் உடனடியாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று தக்கியுடின் ஹசான் கேட்டுக் கொண்டார்.








