Jan 2, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிச் சீருடைகளை தேசிய அளவில் ஒருமைப்படுத்தும் நடவடிக்கை: 2027-ம் ஆண்டில் அமல்படுத்த கல்வி அமைச்சு திட்டம்
தற்போதைய செய்திகள்

பள்ளிச் சீருடைகளை தேசிய அளவில் ஒருமைப்படுத்தும் நடவடிக்கை: 2027-ம் ஆண்டில் அமல்படுத்த கல்வி அமைச்சு திட்டம்

Share:

புத்ராஜெயா, ஜனவரி.02-

பள்ளிகளுக்கு இடையிலான வண்ண வேறுபாடுகளை நீக்கி, தேசிய அளவில் பள்ளிச் சீருடைகளை ஒருமைப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் பள்ளிகளுக்கிடையிலான சீருடை வேறுபாடுகள் ஒருமைப்படுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல பங்குதாரர்கள் மற்றும் அதன் தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான மதிப்பாய்வு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படவுள்ளதாக தலைமைக் கல்வி இயக்குநர் டாக்டர் முஹமட் அஸாம் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

பல வண்ணங்களைக் கொண்ட பள்ளிச் சீருடைகள் நம் குழந்தைகளிடம் ஒற்றுமை உணர்வை வளர்க்க ஊக்குவிப்பதில்லை என்று தாம் எண்ணுவதாகக் குறிப்பிட்டுள்ள முஹமட் அஸாம், சிறு வயதிலிருந்தே அவர்கள் வேறுபாடுகளையும், போட்டிகளையும் புரிந்து கொள்ளும் வகையில் வாழக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சில பள்ளிகள் தற்போது ஏழுக்கும் மேற்பட்ட வண்ணங்களை உள்ளடக்கிய சீருடைகளையும், பல்வேறு செயல்பாடுகளுக்கு பல டி-சர்ட்கள், அங்கிகள் போன்ற கூடுதல் உடைகளைக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு இடையிலான இந்த மாறுபட்ட தேவைகள், ஆண்டின் மத்தியில் வேறு பள்ளிகளுக்கு மாறும் மாணவர்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்துவதாகவும், குடும்பங்கள் மீது கூடுதல் நிதி அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் முஹமட் அஸாம் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், சீருடை குறித்த இறுதி முடிவானது எடுக்கப்படும் என்றும், 2027-ஆம் ஆண்டில், படிப்படியாக முதலாமாண்டு மற்றும் முதலாம் படிவ மாணவர்கள் மத்தியில் சீருடைத் தரநிலையானது அறிமுகம் செய்யப்படும் என்றும் முஹமட் அஸாம் அறிவித்துள்ளார்.

Related News