ஜோகூரில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 1,346 வெளிநாட்டினருக்கு சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து ஜோகூர் மாநில ஜேபிஜே இயக்குநர் ஸுல்கர்னாயின் யாசின் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த ஜூன் 1 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது முறையான ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிய வெளிநாட்டினருக்கு எதிராக நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையில், உரிமம் இன்றி மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஓட்டுதல், செல்லுபடியாகும் சாலை வரி மற்றும் காப்பீடு இல்லாத வாகனங்களைப் பயன்படுத்துதல், தலைக்கவசம் அணியாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான், வங்காளதேசம், சிங்கப்பூர், இந்தோனேசியா, மியன்மார், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், சுமார் 10 ரோஹிங்யாக்களும் இடம்பெற்றிருந்ததாக ஸுல்கர்னாயின் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின்போது மொத்தம் 10,580 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதுடன், 347 மோட்டார் சைக்கிள்கள், 69 கார்கள், 24 தனியார் வாகனங்கள் மற்றும் 15 கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








