Oct 8, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் அரசின் உலு லங்காட் மாவட்ட அளவிலான மைஃபுயூச்சர்ஜோப்ஸ் கண்காட்சியில் 3,197 வேலை வாய்ப்புகள் திறக்கப்பட்டன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் அரசின் உலு லங்காட் மாவட்ட அளவிலான மைஃபுயூச்சர்ஜோப்ஸ் கண்காட்சியில் 3,197 வேலை வாய்ப்புகள் திறக்கப்பட்டன

உலு லங்காட், ஜூலை.19-

சிலாங்கூர் மாநில அரசு, மைஃபுயூச்சர்ஜோப்ஸ் வேலை வாய்ப்பு நிறுவனத்துடன் இணைந்து உலு லங்காட் மாவட்ட நிலையிலான வேலை வாய்ப்பு கண்காட்சியை இன்று சனிக்கிழமை வெகுச் சிறப்பாக நடத்தியது.

சிலாங்கூர் மாநில அரசின் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தலைமையில் உலு லங்காட் , அம்பாங் ஜெயா நகராண்மைக்கழக மண்டபத்தில் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வேலை வாய்ப்பு கண்காட்சி நடைபெற்றது.

வேலை தேடிக் கொண்டிருக்கும் சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களும் பயன் அடையும் நோக்கில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் 25 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் மொத்தம் 3,197 வேலை வாய்ப்புகள் திறக்கப்பட்டதாக ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் வேலை தேடுகின்றவக்ள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முதலாளிகளுடனான நேரடிச் சந்திப்புகள் மூலம் வேலை பெறுவதற்குரிய வாய்ப்பினை இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி வழங்கியதாக அவர் கூறினார்.

இந்த வேலை வாய்ப்பானது, சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனை 37 விழுக்காடும், போக்குவரத்து மற்றும் சேமிப்பு கிடங்கு 16 விழுக்காடும், உணவு மற்றும் பானச் சேவை 14 விழுக்காடும், தவிர நிர்வாகம், கல்வி, தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் துணைச் சேவைகள் போன்ற பிற துறைகளையும் உள்ளடக்கியுள்ளது என பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

பல நிறுவனங்கள் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாப்புகளை வழங்கியிருப்பதையும் பாப்பாராய்டு சுட்டிக் காட்டினார்.

அந்த வேலை வாய்ப்புகளில் 13,000 ரிங்கிட் வெள்ளி வரை சம்பளத்துடன் கூடிய தகவல் தொழில்நுட்ப விநியோக மேலாளர், 8 ஆயிரம் ரிங்கிட் முதல் 10 ஆயிரம் ரிங்கிட் வரை உற்பத்தி மேலாளர் மற்றும் 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரிங்கிட் வரை கூடுதல் மின் சக்திக்கான சார்ஜ்மேன் ஆகியவை அவற்றுள் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

இன்று வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் 66.16 விழுக்காடு 2,500 ரிங்கிட்டிற்கும் அதிகமான சம்பளத்தையும் 33.8 விழுக்காடு வேலை வாய்ப்புகள் 2,500 ரிங்கிட்டிற்கும் குறைவான சம்பளத்தையும் வழங்கக்கூடிய வேலை வாய்ப்புகளைக் கொண்டிருந்ததாக பாப்பாராய்டு விளக்கினார்.

மேலும் உடனடி நேர்காணல்கள், சுகாதார பரிசோதனை, அரசு நிறுவனங்களின் கண்காட்சி, தொழில் ஆலோசனை சேவைகள் மற்றும் ஏஹ்சான் ரஹ்மா விற்பனை ஆகியவையும் இந்த வேலைக் கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →