மலேசியாவில் 2024-ஆம் ஆண்டு முதல் ரயில்வே கேபிள் திருட்டு சம்பவங்களால் அரசாங்கத்திற்கு 50.05 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் 2025-ஆம் ஆண்டில் மட்டும் KTMB ரயில் சேவைகள் 381 மணி நேரம் தாமதமானதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து துணைப் போக்குவரத்து அமைச்சர் Datuk Hasbi Habibollah நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள தகவலில், இந்த திருட்டு சம்பவங்கள் KTMB, Prasarana Malaysia Berhad மற்றும் ECRL திட்டத்தின் உள்கட்டமைப்புகளைப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், KTMB-யில் மட்டும் கடந்த ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரையில் 432 கேபிள் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும், Prasarana-வின் MRT மற்றும் LRT பாதைகளில் 163 கேபிள் திருட்டுச் சம்பவங்களும், ECRL திட்டத்தில் 71 கேபிள் திருட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க, கேபிள் திருட்டைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.








