கோலாலம்பூரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தீபாவளி சந்தையில் வியாபாரிகளுக்கான கட்டணம் 85 விழுக்காடு குறைக்கப்பட்டு, அதிகபட்சமாக 400 ரிங்கிட் மட்டுமே வசூலிக்கப்படும் என்று கூட்டரசு பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ அறிவித்துள்ளார்.
இந்த 400 ரிங்கிட்டில் 30 ரிங்கிட் உரிமக் கட்டணமும், 150 ரிங்கிட் சேவைக் கட்டணமும், 150 ரிங்கிட் கடைத்தள வாடகையும், 70 ரிங்கிட் வைப்புத் தொகையும் அடங்கும். கடந்த ஆண்டு இதற்காக மொத்தம் 2,626 ரிங்கிட் செலுத்த வேண்டியிருந்தது.

இதனை இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஹன்னா இயோ தெரிவித்தார். கூட்டத்தில் கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ ஃபட்லுன் மாக் உஜுட்டும் கலந்து கொண்டார்.
இந்த ஆண்டு தீபாவளி சந்தை 21 நாட்களுக்குப் பதிலாக 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், மொத்த வணிகக் கடைத்தளங்களின் எண்ணிக்கையும் 164-ல் இருந்து 172 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 9 முதல் நவம்பர் 7-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தச் சந்தை, துன் சம்பந்தன் வளாக வாகன நிறுத்துமிடம் மற்றும் ஜாலான் புனுஸ் 6, மஸ்ஜித் இந்தியா ஆகிய இரு இடங்களில் நடைபெறும்.
மேலும், புதிய வியாபாரிகளுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் மலேசிய இந்து சங்கம் உட்பட நான்கு அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன.
வியாபாரிகள் இடைத்தரகர்களை நாடாமல், நேரடியாக கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல்லை அணுகி அதிகபட்சம் 400 ரிங்கிட் மட்டுமே செலுத்துமாறும் ஹன்னா இயோ கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஏற்பாடுகளுக்காக டிபிகேஎல் சுமார் 15 லட்சம் ரிங்கிட் செலவிடுகிறது என்பதையும் அமைச்சர் ஹன்னா இயோ தெளிவுபடுத்தினார்.








