மலாக்கா, டிசம்பர்.19-
மலாக்காவில் உள்ள ஹலால் சான்றிதழ் பெற்ற ஹோட்டல் சமையலறைகள் மற்றும் உணவகங்களில் கிறிஸ்துமஸ் போன்ற பிற மதப் பண்டிகை அலங்காரங்கள் அல்லது விளம்பரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், ஜாக்கிம் எனப்படும் மலேசிய சமய இலாகாவின் வழிகாட்டலையொட்டியவையாகும் என்று மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரஹ்மாட் மரிமான் தெரிவித்துள்ளார்.
பல்லின மற்றும் பல மதங்களைக் கொண்ட சமூகத்தில், அனைத்து தரப்பினரின் உணர்வுகளையும் பாதுகாப்பதையும், சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹலால் சான்றிதழ் பெற்ற ஹோட்டல்களின் சமையலறைகள் மற்றும் முக்கிய உணவு பரிமாறும் இடங்களில் மட்டுமே மத ரீதியான அலங்காரங்கள் அல்லது சின்னங்கள் அனுமதிக்கப்படாது.
எனினும் ஹோட்டல் அறைகள் போன்ற ஹலால் சான்றிதழ் வரம்பிற்குள் வராத இடங்களில் பண்டிகை அலங்காரங்களைச் செய்ய எந்தத் தடையும் இல்லை. பயனீட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தைத் தவிர்க்கவும், மலேசியாவின் ஹலால் சான்றிதழின் நேர்மையை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது யாருடைய பண்டிகை கொண்டாடும் உரிமையையும் பறிப்பதற்கான நடவடிக்கை அல்ல, மாறாக நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதே இதன் நோக்கம் என்றும் டத்தோ ரஹ்மாட் மரிமான் தெளிவுபடுத்தினார்.








