Dec 4, 2025
Thisaigal NewsYouTube
13 ஆவது மலேசியத் திட்டத்தில் பூமிபுத்ரா பொருளாதார செயல் திட்டங்கள் தொடரும்- சீனர்கள், இந்தியர்களுக்குப் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்: பிரதமர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

13 ஆவது மலேசியத் திட்டத்தில் பூமிபுத்ரா பொருளாதார செயல் திட்டங்கள் தொடரும்- சீனர்கள், இந்தியர்களுக்குப் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்: பிரதமர் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஜூலை.31-

13 ஆவது மலேசியத் திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கான பொருளாதாரச் செயல் திட்டங்கள் தொடரும் அதே வேளையில் குறைந்த வருமானம் பெறுகின்ற சீனர்கள் மற்றும் இந்தியர்களின் சமூகவியல்- பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு முன்முயற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று 13 ஆவது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

13 ஆவது மலேசியத் திட்டத்தில் ஒன்பது அம்சங்களை உள்ளடக்கிய திட்டத்தின் கீழ் மலேசியாவின் வளர்ச்சியில், அனைத்து நிலைகளிலிருந்தும் மக்கள் பயன் பெறுவதை உறுதிச் செய்வதற்கு தனது மடானி அரசாங்கம் ஓர் ஒட்டுமொத்த உள்ளடக்க அணுகுமுறையைக் கொண்டிருப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் விளக்கினார்.

குறிப்பாக, இன அடிப்படையிலான தீர்வு அணுகுமுறையிலிருந்து மாறி, மக்களின் உண்மையானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை வழங்கும் ஒரு கருத்தாக்கத்திற்கு நாம் மாற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அமானா இக்தியார் மலேசியா மற்றும்n தெக்குன் ஆகியவற்றின் கீழ் பல்வேறு திட்டங்கள், அனைவருக்கும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை வழங்குவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும் குறைந்த வருமானம் கொண்ட சீன மற்றும் இந்தியர்களுக்கு 13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் கல்வி, தொழில்முனைவு மற்றும் வீட்டு வசதி ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய அவர்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த ஒரு விரிவான திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

Related News