புத்ராஜெயா, ஜூலை.15-
தமது இறுதி மூச்சு விடும் வரையில் உடலுடன் இரண்டறக் கலந்த மலேசியாவை நேசிப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தமது 100 ஆவது பிறந்தநாளை மிக எளிமையாகக் கொண்டாடியவரான நாட்டின் 4 மற்றும் 7 ஆவது பிரதமரான துன் மகாதீர், தமது நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களுக்குத் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.
மக்களின் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்து போராடி வரும் தாம், இறுதி மூச்சு வரை இந்த மண்ணை நேசிக்கும் வற்றாத குண இயல்பைக் கொண்டு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வயதான காலத்திலும் ஏன் இன்னமும் போராடிக் கொண்டு இருக்கிறீர்கள், இளையோர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுங்கள் என்று நான் பார்க்கும் ஒவ்வொருவரும் எனக்கு உபதேசம் செய்கின்றனர்.
இதற்கு எனது பதில் மிகச் சாதாரணமானதுதான். இந்த வயதான காலத்திலும் நான் ஏன் இவ்வளவு சிரமத்தை எடுத்துக் கொள்கிறேன் என்றால் நான் ஒரு மலேசியர். ஒரு மலாய்க்காரர். இது எனது நாடு. நான் இங்கு பிறந்து, வளர்ந்தவர். இந்த நாட்டிலிருந்து நான் நிறைய அனுகூலம் பெற்றுள்ளேன். எனவே இந்த நாட்டுக்கும், இந்த மண்ணுக்கும் என் வாழ்நாளை, இறுதி மூச்சு வரை அர்ப்பணிக்கக் கடமைப்பட்டுள்ளேன் என்று துன் மகாதீர் பேட்டி அளித்துள்ளார்.








