கோலாலம்பூர், டிசம்பர்.24-
மலேசிய மருத்துவ மன்றமான எம்எம்சியில் பதிவு செய்யவில்லை என்றாலும் கூட, மருத்துவப் பட்டதாரிகள், தங்களது கல்வித் தகுதியின் அடிப்படையில், பெயருக்கு முன் ‘டாக்டர்’ பட்டத்தைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யாமலேயே, டாக்டர் பட்டத்தைப் பயன்படுத்துவதாகச் சில தரப்பினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள எம்எம்சி, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அதே வேளையில், டாக்டர் பட்டத்தைக் கொண்டிருப்பதால், அவர்கள் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாது என்பதையும் எம்எம்சி சுட்டிக் காட்டியுள்ளது.
மருத்துவச் சட்டம் 1971-இன் விதிமுறைகளுக்கு இணங்குவதன் அடிப்படையிலேயே, அவர்கள் மருத்துவ சிகிச்சையளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எம்எம்சி குறிப்பிட்டுள்ளது.
பட்டம் பெற்ற மருத்துவர்கள், மலேசியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய பின்னரே, எம்எம்சி-யில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எம்எம்சி தெரிவித்துள்ளது.








