2018-ஆம் ஆண்டு நாடக நிகழ்ச்சியில் ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாகக் கூறப்படும் காணொளி தொடர்பில், தேச நிந்தனை அம்சங்கள் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் கூறுகையில், காணொளியில் இடம் பெற்ற மூன்று நடிகர்கள் ஜோகூர் மற்றும் சிலாங்கூரில் கைது செய்யப்பட்டு, பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
28 முதல் 47 வயதுக்குட்பட்ட அந்த மூவரிடமும் அந்த நாடகத்தின் காணொளிப் பதிவு எதுவும் இல்லை என்றும், அவர்கள் சமூக ஊடகங்களில் அதைப் பதிவேற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-இன் 233-ஆவது பிரிவின் கீழும் விசாரணை நடைபெறுகிறது.
மேலும், காணொளியைப் பரப்பிய நபரையும், அதன் மூலப் பதிவையும் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நாடகம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பினாங்கில் அரங்கேற்றப்பட்டதாக நம்பப்படும் நிலையில், அப்போது இது தொடர்பில் எந்தப் போலீஸ் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் டத்தோ குமார் விளக்கினார்.








