கோலாலம்பூர், டிசம்பர்.17-
மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, தொடக்கத்திலேயே கொலை வழக்காகப் பதிவு செய்து, விசாரணை செய்யாதது ஏன்? என சட்டத் சீர்திருத்தங்களுக்கான துணை அமைச்சர் எம். குலசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது இவ்வழக்கை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை செய்ய சட்டத்துறை அலுவலகம் நேற்று உத்தரவிட்டதைப் பாராட்டியுள்ள குலசேகரன், இவ்வழக்கானது ஆரம்பத்தில் எந்த பிரிவின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே வேளையில், இவ்வழக்கு விசாரணையானது விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற்றால் மட்டுமே, நமது சட்டங்களின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிலைநிறுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களும், சாட்சிகளும், பாதுகாக்கப்படுவதைப் போலீசார் உறுதிச் செய்ய வேண்டும் என்றும் குலசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, இந்த விசாரணையானது, அங்கு உண்மையில் நடந்தது என்ன? என்பதை வெளிக்கொணரும் என்ற நம்பிக்கையையும், உறுதிப்பாட்டையும் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி, அந்த மூன்று இந்திய இளைஞர்களும் கொள்ளையர்கள் என வகைப்படுத்தப்பட்டு, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையைக் கொலையாக மறுவகைப்படுத்துமாறு சட்டத்துறை அலுவலகம் நேற்று அறிவித்தது.
இவ்வழக்கில் வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் உறுதி அளித்த அடுத்த 8 மணி நேரத்தில் சட்டத்துறை அலுவலகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








