May 6, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களுக்கான பள்ளித் தொடக்க நிதி உதவியைப் பெற்றோர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கான பள்ளித் தொடக்க நிதி உதவியைப் பெற்றோர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

Share:

ஷா ஆலாம், ஜனவரி.20-

மடானி அரசாங்கத்தின் மாணவர்களுக்கான பள்ளித் தொடக்க உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், சிலாங்கூர், சுபாங் பெஸ்தாரி தேசியப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் இன்று கலந்து கொண்டார்.

2023-இல் தொடங்கப்பட்ட மடானி அரசாங்கத்தின் பள்ளித் தொடக்க உதவித்தொகைக்கான இத்திட்டம் ஆண்டுதோறும் மேம்படுத்தப்பட்டு, 2026-ஆம் ஆண்டிற்காக நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக 800 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் படிவம் 6 மாணவர்கள் உட்பட சுமார் 5.2 மில்லியன் மாணவர்கள் பயனடைவார்கள் என்று சுங்கை பூலோ எம்.பி.யான டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

ஜனவரி 11ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 150 ரிங்கிட் உதவித்தொகை கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. இனம், மதம் அல்லது குடும்பப் பின்னணி என எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து மலேசிய மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பை உறுதிச் செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, சுபாங் பெஸ்தாரி தேசியப் பள்ளியில் மட்டும் 2,363 மாணவர்கள் இதன் மூலம் சுமார் 3 லட்சத்து 55,000 ரிங்கிட் நிதியுதவியைப் பெறுகின்றனர் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

கல்விக்கான நிதிச் சுமையால் எந்தவொரு மலேசியக் குழந்தையும் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்கக்கூடாது என்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இலக்கை இத்திட்டம் பிரதிபலிக்கிறது. இந்த உதவித்தொகைப் பணத்தைப் பெற்றோர்கள் முறையாகத் திட்டமிட்டு, தங்கள் குழந்தைகளின் கல்வித் தேவைகளுக்காகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

Related News