கோலாலம்பூர், செப்டம்பர்.22-
பாலியல் வன்கொடுமை மீதான சட்டப்பூர்வ கொள்கையில் அரசாங்கம் இதுவரை தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை என்று சட்டச் சீர்த்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கொண்டுள்ள சட்டப்பூர்வ கொள்கை தொடர்புடைய சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைகள் அல்லது விமர்சனங்கள் இருந்த போதிலும் அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது 18 வயதுக்குட்பட்டவர்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்ட அனைத்துலகச் சட்டத் தரங்களுக்கு ஏற்ப உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
கிளந்தான் மாநிலத்தில் 18 வயதுக்கு உட்பட்ட பதின்ம வயதுடையவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் புகார்களில் 90 விழுக்காடு இருவரின் சம்மதத்தின் பேரில் நடைபெற்றுள்ளது.
இதில் ஆண் நபரைச் சட்டத்தின் முன் நிறுத்தும் அதே வேளையில் இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடப்பு குற்றவியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் முன்வைத்த யோசனை தொடர்பில் கருத்துகையில் அஸாலினா மேற்கண்டவாறு கூறினார்.








