கோலாலம்பூர், ஆகஸ்ட்.27-
பள்ளிகளில் மாணவர்களுக்குப் பிரம்படித் தண்டனை கொடுக்கும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த எம்.பி. ஒருவர், இன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
பிரம்படித் தண்டனை கொடுக்கும் நடைமுறை அகற்றப்பட்டதால் மாணவர்களிடையே கட்டொழுங்கு சீர்குலைந்து இருப்பதுடன் இன்று பல்வேறு சமூகவியல் பிரச்னைகள் பள்ளிகளில் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளன என்று மக்களவையில் உலு திரெங்கானு எம்.பி. ரோசோல் வாஹிட் வலியுறுத்தினார்.
ஒரு காலத்தில் வீடுகளில் மட்டுமின்றி பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டொழுங்குச் சீலர்களாகத் திகழ்ந்ததற்கு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரம்படித் தண்டனை முறையே காரணமாகும்.
கட்டொழுங்கை மீறும் மாணவர்களுக்குப் பிரம்படித் தண்டனை கொடுப்பது மூலம் சிறு பிராயத்திலேயே அவர்கள் திருத்தப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. காரணம், முன்பு பள்ளிகளில் பிரம்படித் தண்டனைக்கு கல்வி அமைச்சு அதீத முக்கியத்துவம் அளித்தது. மாணவர்களின் கட்டொழுங்கு மீட்கப்படுவதற்குத் துணை நின்றது.
ஆனால் இன்று, பெற்றோர்களுக்குக் கல்வி அமைச்சு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று ரோசோல் வாஹிட் தெரிவித்தார்.








