வரும் நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலை திருத்தலம், ஶ்ரீ மகா துர்கை அம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 54 ஹோம குண்டலங்களுடன் சகல சௌபாக்கியங்களும் அருளும் ஶ்ரீ ஸம்ரிதி மங்கள நவசண்டி மகா யாகம் மிக பிரமாண்டபவமான முறையில் பத்துமலை வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.
ஶ்ரீ ஸம்ரிதி மற்றும் சித்தா காஸ்மிக் தோற்றுநரும், பிரபஞ்ச சக்தியின் வல்லுநருமான ஶ்ரீ ஶ்ரீ டாக்டர் பாலக்கல் -லின் ஒத்துழைப்புடன் வரும் அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளில் காலை 6 மணி முதல் 11:30 மணி வரை இந்த ஶ்ரீ ஸம்ரிதி மங்கள நவசண்டி மகா யாகத்தை கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தினங்களிலும் காலையில் நடைபெறும் இந்த மகா யாகத்தை இந்தியாவின் சக்தி பீடங்களிலுள்ள புகழ்பெற்ற வேத விற்பனர்களால் நடத்தபடவிருப்பதாக டான் ஶ்ரீ நடராஜா, இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
மலேசியாவின் முதல் முறையாக நடைபெறவிருக்கும் இந்த மகா யாகத்தை சண்டி ஹோமம் திலகம் சக்தி ஶ்ரீ, ஶ்ரீவித்ய உபாசகர் பி.மணிகண்ட சர்மா மற்றும் காஞ்சிபுரம், ஶ்ரீ காமட்சி அம்பாள் தேவஸ்தானத்தின் சேர்ந்த ஸ்தானிகம் சி.ஆர் நடராஜா ஆகியோர் வழிநடத்துவர் என்று டான் ஶ்ரீ நடராஜா குறிபிட்டார்.
நிகழ்வின் முதல் நாளான அக்டோபர் 22 ஆம் தேதி மாலை 4 மணி முதல் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரின் புதல்வி செல்வி உத்தாரா ஆகியோரின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெறும். இந்த மகா யாகத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி டான் ஶ்ரீ நடராஜா கேட்டுக் கொள்கிறார்.








