குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில், புதிய குறைந்தபட்ச ஊதிய உயர்விலிருந்து அவற்றுக்கு தற்போதைக்கு விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறைந்தபட்ச ஊதிய விவகாரத்தைத் தாம் எழுப்பியதாகத் தெரிவித்தார்.
தொழிலாளர்களின் ஊதியம் தொடர்ந்து உயர்த்தப்பட வேண்டும் என்பதில் அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ள போதிலும், தற்போதைய பொருளாதாரச் சவால்கள் மற்றும் செயல்பாட்டுச் செலவு அதிகரிப்பை எதிர்கொள்ளும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் நிலையும் கருத்தில் கொள்ளப்பட்டதாக ஸ்டீவன் சிம் கூறினார்.
இந்தத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த, முன்னேற்ற ஊதியக் கொள்கையின் கீழ் ஊதிய மானியம் உள்ளிட்ட மாற்று ஆதரவுகள் வழங்கப்படும் என்றும் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதுடன், நிறுவனங்கள் போட்டித்தன்மையுடன் வளர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.








