Jun 27, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநில 16-வது சட்டமன்றத் தேர்தல் / 56 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் சுமுகமாக நிறைவுபெற்றது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநில 16-வது சட்டமன்றத் தேர்தல் / 56 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் சுமுகமாக நிறைவுபெற்றது

Share:

ஜோகூர் மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தலுக்கான 56 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்தது.

காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தகுதி பெற்ற வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலானது தொகுதி வாரியாக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள 14 நாட்கள் தேர்தல் பிரசார காலம் இன்று முதல் தொடங்குகிறது.

இந்தப் பிரசார காலம் வரும் ஜூலை 10-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீடிக்கிறது.

அதன் பின்னர், வரும் ஜூலை 11-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இன்று வேட்புமனு தாக்கல் மையங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் திரளாகக் ஒன்று கூடி, தங்களது கட்சி வேட்பாளர்களுடன் பேரணியாகச் சென்று உற்சாகமான ஆதரவை வெளிப்படுத்தினர்.

என்றாலும், வேட்புமனு தாக்கல் மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியான மற்றும் ஒழுங்கான சூழல் நிலவியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எந்தவித ஆத்திரமூட்டும் சம்பவங்களோ, ஒழுங்கீன நடவடிக்கைகளோ பதிவாகவில்லை.

மேலும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், பொதுமக்கள் தன்னார்வப் படையான ரேலா உறுப்பினர்களின் உதவியுடன் கூட்ட நெரிசலும் கட்டுப்படுத்தப்பட்டது.

16-வது ஜோகூர் மாநில தேர்தலில் மொத்தம் 27 லட்சத்து 27 ஆயிரத்து 926 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில், 27 லட்சத்து 3 ஆயிரத்து 175 பேர் பொதுமக்கள் ஆவர்.

அதேவேளையில், 12 ஆயிரத்து 41 பேர் ராணுவத்தினர் மற்றும் அவர்களது துணைகள், 12 ஆயிரத்து 710 பேர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைகள் ஆவர்.

Related News