கோலாலம்பூர் டியூக் விரைவுச்சாலை, ஜாலான் கூச்சிங் சந்திப்பு அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில், அதிலிருந்த இருவர் உடல் கருகி பலியாகினர்.
இன்று அதிகாலை 5.20 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஜின்ஜாங்மற்றும் ஸ்ரீ ஹர்தாமாஸ் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவ இடத்தில், மூவர் பயணித்த அந்த காரானது, முழுவதுமாக தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காருக்குள் சிக்கியிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








