வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில், புத்திரி வங்சா சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ளது.
இன்று காலை 10 மணியளவில், 56 தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் சுமூகமாக நடைபெற்று முடிந்ததையடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் படி, புத்திரி வங்சா தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரும், முன்னாள் கல்வி அமைச்சருமான மஸ்லி மாலிக் களமிறங்குகிறார்.
அவரை எதிர்த்து பாரிசான் நேஷனல் சார்பில் தியோ சியா லிங், மூடா கட்சியின் ரஷிஃபா அல்ஜுனித், பெர்சாமா கட்சியின் நிகோலஸ் பால் வின்சென்ட் மற்றும் சுயேட்சை வேட்பாளர் வாங் வீ சியோன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில், ஆறு முனைப் போட்டியில் மூடா கட்சி 7,114 வாக்குகள் பெரும்பான்மையுடன் இத்தொகுதியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மாச்சாப் தொகுதியில், ஜோகூர் மாநில பாரிசான் நேஷனல் தலைவர் ஓன் ஹஃபிஸ் காசி-ஐ எதிர்த்து பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் நூர் ஹஃபிஸ் ரோஸ்லான் போட்டியிடுகின்றார்.
அதேவேளையில், புக்கிட் கெப்போங் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய மூன்று கூட்டணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
புக்கிட் கெப்போங் தொகுதியில், பாரிசான் வேட்பாளர் அஹ்மத் சியாரியே யுசோஃப் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சி சுப்பிரமணியம் ஆகியோரை எதிர்த்து, பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் டாக்டர் சஹ்ருதீன் ஜமால் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், வாக்குப்பதிவானது, வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டியே வாக்குப்பதிவு வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.








