Oct 12, 2026
Thisaigal NewsYouTube

2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 14 ஆயிரத்து 179 மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் A பெற்றனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 14 ஆயிரத்து 179 மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் A பெற்றனர்

புத்ராஜெயா, ஏப்ரல்.24-

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவு இன்று வியாழக்கிழமை காலையில் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் 14 ஆயிரத்து 179 மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் A பெற்றுள்ளனர் என்று கல்வி தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அட்னான் தெரிவித்துள்ளார்.

தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 14 ஆயிரத்து 179 மாணவர்கள் அல்லது 3.7 விழுக்காட்டினர் எல்லா பாடங்களிலும் A+, A மற்றும் A- என சிறப்புத் தேர்ச்சியைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு SPM தேர்வு முடிவுடன் ஒப்பிடுகையில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 0.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது கூடுதலாக 2,446 மாணவர்கள் சிறப்பு தேர்ச்சியைப் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் 11 ஆயிரத்து 713 மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் A பெற்றனர் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள் மலாய் மொழியிலும், சரித்திரப் பாடத்திலும் கட்டாயத் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2013 ஆம் ஆண்டு கல்வி அமைச்சு அறிமுகப்படுத்திய கொள்கைக்கு ஏற்ப இவ்விரு பாடங்களிலும் அதிகமான மாணவர்கள் சிறந்த அடைவு நிலையைப் பெற்றுள்ளதாக அவர் விளக்கினார்.

குறைந்தபட்ச தேர்ச்சி அல்லது கிரேட் C பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் இம்முறை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 0.4 விழுக்காட்டினர் அல்லது 86 ஆயிரத்து 040 மாணவர்கள் குறைந்தபட்ச தேர்ச்சியைப் பெற்றுள்ளதாக டத்தோ அஸ்மான் அட்னான் குறிப்பிட்டார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு குறைந்தபட்ச தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 112 பேராகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இன்று புத்ராஜெயாவில் 2024 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்த போது டத்தோ அஸ்மான் அட்னான் இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →