Oct 12, 2026
Thisaigal NewsYouTube

நேபாள பேரிடர்: உயிருடன் மீட்கப்பட்ட மலேசியர் பற்றி தாமதமாக அறிவித்தது ஏன்?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நேபாள பேரிடர்: உயிருடன் மீட்கப்பட்ட மலேசியர் பற்றி தாமதமாக அறிவித்தது ஏன்?

நேபாள வெள்ளப் பேரிடரில் காணாமல் போன மலேசியர்களில் லோ என்ற நபர் பாதுகாப்பாக இருப்பது உறுதியான பின்னரும், வெளியுறவு அமைச்சுக்கும், போலீசாருக்கும் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படாதது ஏன் எனப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஆதரவுக் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

அந்நபர் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதியே குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட நிலையில், ஏறக்குறைய 1 மாதத்திற்குப் பின்னர், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி அவர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாக அக்குழுவின் செய்தித் தொடர்பாளர் ஆர். மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், லோ பாதுகாப்பாக இருப்பது உறுதியான பின்னரும் அவரது குடும்பத்தினரிடம் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடைசியாகக் காணப்பட்ட 54 மலேசியர்கள் இன்னும் காணாமல் போனவர்களாகவே உள்ளதாகவும், அவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி, நேபாளம், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை நிறைவு செய்திருந்தாலும், காணாமல் போனவர்களை அடையாளம் காணும் பணிகளைத் தொடரவும், டிஎன்ஏ ஒப்பீட்டை விரைவுபடுத்தவும் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், பேரிடரில் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக அறிவிப்பதற்கான காத்திருப்புக் காலத்தை 12 ஆண்டுகளில் இருந்து 45 நாட்களாக நேபாளம் குறைக்கவுள்ளதாகக் கூறப்படுவது குறித்தும் மணிவண்ணன் விளக்கம் கோரினார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிதிச் சிக்கல்கள் தொடர்பாக இன்று பேங்க் நெகாரா மலேசியா அதிகாரிகளைச் சந்திக்கவும் இக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →