மாணவர்கள் தம்மையோ அரசாங்கத்தையோ விமர்சிப்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
விமர்சனம் செய்வது குற்றமல்ல என்றும், கல்வியின் நோக்கமே விமர்சனச் சிந்தனையை வளர்ப்பதுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற இளம் எதிர்காலத் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டைத் தொடங்கி வைத்துப் உரையாற்றிய அவர், மாணவர்கள் தங்களது கருத்துகளையும் நிலைப்பாட்டையும் துணிச்சலுடன் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
தலைவர்களும் மாணவர்களைப் போலவே தவறுகள் செய்யக்கூடியவர்கள் என்றும், நாட்டின் கருவூலத்திலிருந்து பில்லியன் கணக்கான தொகையைச் சுரண்டுவது போன்ற தவறுகளும் நிகழலாம் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
மேலும், இளைஞர்கள் உண்மையின் பக்கம் நிற்கவும், ஊழலை எதிர்க்கவும், ஒடுக்குமுறையை நிராகரிக்கவும், அநீதியுடன் ஒருபோதும் சமரசம் செய்யாமல் இருக்கவும் துணிச்சல் காட்ட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
அதேவேளையில், கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பது, நீதியை நிலைநாட்டுவது, மாற்றங்களை முன்னெடுப்பது ஆகியவையே இன்றைய தலைமுறையினருக்கான பொறுப்பாகும் என்று குறிப்பிட்ட அன்வார், நேர்மையும் கண்ணியமும் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்ப இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்றைய இளைஞர்கள் கொள்கைப் பிடிப்பும், நம்பகத்தன்மையும், துணிச்சலும் கொண்ட தலைவர்களாக உருவெடுத்து, மலேசியாவைச் சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.








