பெர்லிஸ் மாநில எல்லைப் பகுதியில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை சட்டவிரோதமாக ஊடுருவும் வகையில் 25 இரகசிய பாதைகள் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மனிதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடத்தல் பொருட்களின் சட்டவிரோதப் போக்குவரத்தைத் தடுக்க அமலாக்க அமைப்புகள் அப்பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் துணை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஷம்சுல் அனுவார் நசாரா இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டவிரோதமாக எல்லைகளைக் கடப்பவர்களைக் கைது செய்வதையும், பொருட்களைக் கைப்பற்றுவதையும் மட்டும் வைத்து நடவடிக்கைகளின் வெற்றியை மதிப்பிட முடியாது எனக் குறிப்பிட்ட அவர், கடத்தல் கும்பல்களின் தலைவர்கள், அவர்களுக்கு நிதியுதவி வழங்குவோர், ஆட்களைச் சேர்ப்பவர்கள் மற்றும் அவர்களின் நிதி வலையமைப்புகளைச் சட்டத்தின் மூலம் அதிரடியாக முடக்குவதே முக்கிய நோக்கம் என்றார்.
அதேவேளையில், கடந்த ஆண்டு பெர்லிஸ் எல்லையில் 6.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 6.52 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கிடையே, நிலம் மற்றும் கடல் எல்லைகளைக் கண்காணிக்க, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் தேசிய எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பை அமைச்சு உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் பல்வேறு அமலாக்க அமைப்புகளின் தரவுகளை இணைத்து, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை நிகழ்நேரத்தில் கண்டறிந்து விரைவாகச் செயல்பட இந்த அமைப்பு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








