கோலாலம்பூர், ஆகஸ்ட் 25-
கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் 8 மீட்டர் ஆழமுள்ள பாதாள சாக்கடையில் விழுந்த மாதுவைத் தேடும் பணியை நிறுத்துமாறு, மீட்பு நடவடிக்கை குழுவினருக்கு கழிவுநீர் துறை சார்ந்த நிபுணர் ஒருவர் இன்று ஆலோசனைக் கூறியுள்ளார்.
பாதாள சாக்கடை கால்வாய்களில் நீரின் வேகம் அதீத வேகத்தில் பாய்வதை கருத்தில் கொண்டு, அந்த இந்தியப் பிரஜை இறந்து விட்டதாக கருத வேண்டும் என்று மலேசியாவின் முன்னணி கழிவுநீர் துறை சார்ந்த நிபுணரான ஜி. பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் மாநகரில் பாதாள சாக்கடைகளின் கால்வாய்கள் 1.5 மீட்டர் அகலமுடையதாகும். மனித உடலை அடித்துச் செல்வதற்கு அது போதுமான அகலமாகும். அதேவேளையில் அந்த கழிவு நீர் சாக்கடை கால்வாய்கள், பல பிரிவுகளை கொண்டுள்ளன. எனவே 1.5 மீட்டர் அகலமுள்ள கால்வாய்கள், நீரோட்டத்தின் வேகத்தில் மனித உடலை மிக துரிதமாக அதன் பிரதான நதிக்கு கொண்டு சென்று இருக்கலாம்.
மூன்று நாட்களாகியும் அந்தப் பெண்ணின் உடல் கிடைக்கவில்லை என்றால் அந்தப் பெண்ணின் உடல், சம்பந்தப்பட்ட பாதாள சாக்கடையில் இல்லை என்பதே இதன் பொருள் என்று பல ஆண்டு காலமாக பாதாள சாக்கடைத் துறையில் பணியாற்றி நிபுணத்துவம் பெற்றவரான பரமேஸ்வரன் கூறுகிறார்.
பாதாள சாக்கடையின் கழிவு நீர் ஒரு விநாடிக்கு குறைந்த பட்சம் ஒரு மீட்டர் வேகத்தில் ஓட வல்லதாகும். அந்தக் கணக்கெடுப்பின்படி 24 மணி நேரத்தில் மனித உடலை அந்த பாதாள சாக்கடை சுமார் 86.4 கிலோமீட்டர் தூரத்திற்கு கொண்டு சென்று இருக்கலாம் என்று அந்த பொறியியலாளர் கூறுகிறார்.
ஓர் இந்தியப் பிரஜையான 48 வயது விஜயலெட்சுமி, கடந்த வெள்ளிக்கிழமை அந்த சாக்கடை நீரில் விழுந்து மூன்று நாள் ஆகி விட்டன. இனியும், பாதாள சாக்கடைகளை இலக்காக கொண்டு மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.
அந்தப் பெண்ணின் உடலை கண்டு பிடிக்க வேண்டுமானால், கோலாலம்பூர் PANTAI- யில் உள்ள இண்டா வாட்டாரின் பிரதான கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
அந்தப் பெண்ணின் உடல், அந்த கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு அடித்து செல்லப்பட்டு இருக்க வேண்டும் என்று தாம் சந்தேகிப்பதாக மலேசிய நீர் மற்றும் கழிவு நீர்தர பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான பரமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.








