சரவாக் மாநிலம், கூச்சிங் நகரில் உள்ள துங்கு புத்ரா-ஹெல்ப் அனைத்துலக பள்ளியில் நேற்று ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 16 வயது மாணவர், அச்சம்பவத்தை 12 நிமிடங்கள் 6 விநாடிகள் சமூக ஊடகத்தில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளதாக சரவாக் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் சைஃபுல்லிஸான் இஷாக் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அம்மாணவரைக் கைது செய்த மாநில போலீசார் பின்னர் அவரைப் பிணையில் விடுவித்துள்ளனர்.
ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்திக் காயம் ஏற்படுத்தியதாகவும், 1957-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் கீழும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரின் உடல்நிலை சீராக இருப்பதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் சம்பவத்தின் போது வகுப்பறையில் இருந்த மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறியதாகவும், வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளி அன்றைய தினம் முன்கூட்டியே மூடப்பட்ட நிலையில், அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து இன்று வகுப்புகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பள்ளியின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், மூன்று துணை போலீஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
மேலும் வளாகத்திற்குள் நுழைவோருக்குப் பாதுகாப்புச் சோதனைகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக சரவாக் மாநிலக் கல்வித் துறையும் தெரிவித்துள்ளது.








