Nov 14, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில 2026 பட்ஜெட்டில் 3.23 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு, இந்திய மாணவர்களின் நலன் தொடர்ந்து பேணப்படும்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மாநில 2026 பட்ஜெட்டில் 3.23 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு, இந்திய மாணவர்களின் நலன் தொடர்ந்து பேணப்படும்

Share:

ஷா ஆலாம், நவம்பர்.14-

2026 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் மாநில அரசு 3.23 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

அடுத்தாண்டுக்கான நிர்வாகச் செலவீனம், மாநில மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமிருடின் விவரித்தார்.

ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில், 1.86 பில்லியன் ரிங்கிட் நிர்வாகச் செலவினங்களுக்காகவும்,1.37 பில்லியன் ரிங்கிட் மேம்பாட்டுச் செலவினங்களுக்காகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

சவாலான பொருளாதாரச் சூழலை எதிர்கொள்ளும் நிலையில், மாநில அரசாங்கம் தனது நிதி நிலைத்தன்மையைத் தொடர்ந்து பராமரித்து வருவதாகவும், 2026 ஆம் ஆண்டு பொருளாதார மந்த நிலையைச் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும் மந்திரி புசார் குறிப்பிட்டார்.

இதனிடையே சிலாங்கூர் மாநிலத்தில் பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் கல்வி நலனை உறுதிச் செய்வதில் மாநில அரசாங்கம் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் பள்ளிப் பேருந்து கட்டணத்திற்கு 1.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களின் போக்குவரத்துச் செலவைக் குறைக்க உதவும். ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 300 ரிங்கிட் நிதி உதவி வழங்கப்படும்.

இதே போன்று B40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்கள், பொதுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் உயர்க்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா படிப்பைத் தொடர நிதியுதவி அளிக்கப்படுகிறது என்றார்.

ஒரு முறை வழங்கப்படும் இந்த உதவி, பட்டப்படிப்புக்கு 5,000 ரிங்கிட் வரையிலும், டிப்ளோமா படிப்புக்கு 3,000 வரையிலும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் கருவூலத்திற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.

இந்தத் திட்டங்கள், பொருளாதாரச் சுமையால் கல்வியைத் தொடர முடியாமல் போகும் நிலையில் உள்ள இந்திய மாணவர்களுக்குப் பேருதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடைய சிலாங்கூர் மாநில அரசாங்கப் பணியாளர்கள் மூன்று மாதச் சம்பளத் தொகையைப் போனஸாகப் பெறுவர் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.

Related News