கோலாலம்பூர், செப்டம்பர்.13-
மாணவி ஸாரா கைரினா மகாதீர் வழக்கில் விசாரணைகள் முழுமையாக முடியும் வரையில், பொதுமக்கள் யாரும் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இவ்வழக்கில் இதுவரையில், ஜஸ்தீஸ் ஃபோர் ஸாரா என்ற பிரச்சாரத்தின் மூலமாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு, நீதி கேட்டு வந்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட அவர்கள், இனி அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
அதே வேளையில், இவ்வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கும் பொதுமக்கள், வீண் வதந்திகளையும், கட்டுக் கதைகளையும் பரப்பக்கூடாது என்றும், அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இவ்வழக்கில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் இன்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.








