முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக், 1எம்டிபி ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கவும், 11.387 பில்லியன் ரிங்கிட் அபராதத்தை அமல்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் கோரி விண்ணப்பித்துள்ளார்.
இந்த விண்ணப்பம் தொடர்பாக அவரது வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா, இன்று நடைபெற்ற வழக்கு மேலாண்மையின் போது கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி ருவேனா மாட் நோர்டின் முன்னிலையில் இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார்.
மேலும், இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரும் சான்றிதழும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, 1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால், அதுவரை சிறைத் தண்டனையை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், 2028-ஆம் ஆண்டு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை தொடங்கும் நிலையில், அவருக்கு எதிராக சிறையில் அடைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்றும் ஷாஃபி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விண்ணப்பத்தின் மீதான விசாரணையை அக்டோபர் 14-ஆம் தேதிக்கு நீதிபதி ருவேனா ஒத்திவைத்தார்.
மேலும், இதனுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் அக்டோபர் 13-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு 1எம்டிபி நிதி தொடர்பான வழக்கில், 2.28 பில்லியன் ரிங்கிட் தொகையானது, கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நஜிப்பின் ஏம்பேங்க் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான 4 குற்றச்சாட்டுகள் மற்றும் பணமோசடி தொடர்பான 21 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 11.387 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நஜிப் நிறைவு செய்த பின்னர், 1எம்டிபி வழக்கின் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை 2028-ஆம் ஆண்டு தொடங்க உள்ளது.
இதனிடையே, தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்ட போது, உடனடியாக தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி விண்ணப்பிக்கப் போவதில்லை என்றும், அதற்கான விண்ணப்பத்தை பின்னர் தாக்கல் செய்யும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் நஜிப்பின் வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








