கோலாலம்பூர், நவம்பர்.17-
கம்போடியாவில் மனிதக் கடத்தல் கும்பலால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட, 24 வயதான மலேசியர் ஒருவரை, மலேசிய பன்னாட்டு மனிதநேய அமைப்பான MHO பத்திரமாக மீட்டுள்ளது.
நேற்று கம்போடியாவில் இருந்து விமானத்தின் மூலம் அவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சூதாட்ட மையம் ஒன்றில் மாதம் 4,132 ரிங்கிட் வருமானத்துடன் கூடிய வேலை என்று ஏஜெண்ட் ஒருவர் சொன்ன வாக்குறுதியை நம்பிச் சென்ற அவர், அங்கு மோசடி வேலைகளைச் செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளார்.
ராவ் என்ற முன்னாள் லாரி ஓட்டுநரான அவர், மோசடி வேலைகளைச் செய்ய மறுப்பு தெரிவித்ததையடுத்து, அக்கும்பல் அவரை மிகுந்த சித்ரவதைகளுக்கு உள்ளாக்கியுள்ளது.
நிர்வாண நிலையில் தலைகீழாக தொங்கவிடுவது, இருட்டறையில் அடைப்பது போன்ற சித்ரவதைகளைத் தாம் அனுபவித்ததாக நேற்று செய்தியாளர்களிடம் ராவ் தெரிவித்தார்.
மேலும், தன்னை விடுவிக்க 30,000 ரிங்கிட் பிணைத் தொகை கேட்டு மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மனிதக் கடத்தல் கும்பலிடம் சிக்கியுள்ள மேலும் 4 மலேசியர்களை மீட்கும் முயற்சியில் MHO ஈடுபட்டுள்ளது.








