கிள்ளான், ஜனவரி.18-
கிள்ளானில், சிலாங்கூர் மாநில டிஏபி மாநாடு நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த சுமார் 20 கம்போங் பாப்பான் குடியிருப்பாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு வசதி வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு முறை தொடர்ந்து ஆதரவு அளித்தும், தங்கள் வீடுகள் இடிக்கப்பட்ட பிறகு டிஏபி தலைவர்கள் யாரும் நேரில் வந்து சந்திக்கவில்லை என்றும், தங்களுக்கு இன்னும் நிரந்தர வீடுகள் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். 2018-இல் எடுக்கப்பட்ட முடிவின்படி, தங்களுக்கு 99 ஆயிரம் ரிங்கிட் விலையில் வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கட்சியின் தலைவர் கோபிந்த் சிங் தியோவிடம் அவர்கள் ஒரு மனுவை அளித்தனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் வீடுகள் இடிக்கப்பட்ட போது 11 பேர் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக் காட்டிய அவர்கள், பாதிக்கப்பட்ட 29 குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற மாநில முதல்வர் அமிருடின் ஷாரியின் கூற்று, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இப்பிரச்சினையைத் தீர்க்க அரசுக்கு விருப்பமில்லை என்பதைக் காட்டுவதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இப்பிரச்சினைக்குச் சுமூகத் தீர்வு காணும் வரை சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டங்களை முடக்க வேண்டும் என்றும், குடியிருப்பாளர் குழுவுடன் நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.








