புற ஊதாக் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தில், பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வெப்பமான வானிலை, குறைந்த மழைப்பொழிவு மற்றும் தெளிவான வானம் காரணமாக, குழந்தைகள், முதியோர் மற்றும் வெளிப்புறங்களில் பணிபுரிவோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
வெளியே செல்ல வேண்டியிருந்தால், எஸ்.பி.எஃப் 30 அல்லது அதற்கு மேற்பட்ட சூரியக் கதிர் தடுப்பு கிரீமை பயன்படுத்துவதுடன், பொருத்தமான ஆடைகள், தொப்பி மற்றும் புற ஊதாக் கதிர் பாதுகாப்புக் கண்ணாடிகளை அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், போதுமான அளவு தண்ணீர் அருந்தி, வானிலை குறித்த மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் ஜாஹிட் வலியுறுத்தினார்.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் ஏற்படும் ஆபத்துகளை பொதுமக்கள் அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் துணைப்பிரதமர் எச்சரித்தார்.








