பேரா, சித்தியவானில் வங்கி ஒன்றின் பக்கத்தில் உள்ள கட்டடத்தின் மேற்கூரையில் மனித உடல் அவயங்கள் என்று நம்பப்படும் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நேற்று காலை 10.20 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த மனித எலும்புக்கூடுகள் குறித்து மாது ஒருவரிடமிருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.
அந்த இரண்டு மனித உலும்புக்கூடுகள் ஆணா, பெண்ணா கண்டு பிடிக்க இயலவில்லை. அந்த கூரைப்பகுதியில் பேரா மாநில கொடி, கருப்பு நிற நாடாக்கள், துண்டு, துண்டாக வெட்டப்பட்ட வண்ண வடிவங்களை கொண்ட துணிகள் ஆகியவற்றுடன் அந்த எலும்புக்கூடுகள் கிடந்தன.
தவிர கறை படிந்த வெள்ளை சட்டை, நீல நிற தலையணை, இரண்டு சிவப்பு பிளாஸ்டிப் பைகளில் மண்டை ஓடுகள், பிளாஸ்டிக் கனையைக் கொண்ட ஒரு நீண்ட கத்தி ஆகியவற்றையும் போலீசார் மீட்டுள்ளதாக நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.
அவ்விரு மனித எலும்புக்கூடுகளும் பிரேத பரிசோதனைக்காக ஈபோ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நோர்டின் அப்துல்லா கூறினார்.
இது கொலையாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதால் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து தகவல் கொண்டுள்ளவர்கள், விசாரணை அதிகாரி கரிம் அஸ்லான் அப்துல் கரிம் என்பவருடன் 019-3927837 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு நோர்டின் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.








