நாடெங்கிலும் நடத்தப்பட்ட ஆடம்பர கார்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கையில் மொத்தம் 1,814 கார்களை மலேசிய சாலை போக்குவரத்து துறையான ஜேபிஜே பறிமுதல் செய்துள்ளது.
அவற்றில் முன்னாள் தேசிய கால்பந்து வீரர் மற்றும் பிரபல ஊக்கப்பேச்சாளர் ஒருவரின் கார்களும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் மட்டும் கார்ஷே, லம்போகினி உள்ளிட்ட பல்வேறு பிரபல பிராண்டுகளைச் சேர்ந்த 915 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஜேபிஜே துணை தலைமை இயக்குநர் ஜஸ்மானி ஷஃபாவீ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் 899 வாகனங்கள் கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது, வாகன ஓட்டிகள், மோட்டார் வாகன உரிமம் அல்லது சாலை வரியைப் புதுப்பிக்காதது உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் தேசிய கால்பந்து வீரரின் கார் நேற்று அதிகாலை பறிமுதல் செய்யப்பட்டது.
அக்காருக்கு காப்பீடு இல்லாதது, சாலை வரி காலாவதியானது மற்றும் கடந்த டிசம்பர் மாதமே அவரின் ஓட்டுநர் உரிமம் காலாவதியானது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.








