மலேசிய கடற்படைக்கான, தாக்குதல் ஏவுகணைகளை கொள்முதல் செய்யும் மாற்று திட்டத்திற்காக, தற்காப்பு அமைச்சு பல நாடுகளின் சலுகைகளை மதிப்பீடு செய்து வருகின்றது.
என்எஸ்எம் என்றழைக்கப்படும் கடற்படை தாக்குதல் ஏவுகணைகள் கொள்முதல் நடவடிக்கையில், மலேசியாவிற்கான ஏற்றுமதி உரிமத்தை, நோர்வே அரசாங்கம் திடீரென இரத்து செய்ததையடுத்து, இந்த மாற்று வழிகளை அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
தமது துருக்கி பயணத்தின் போது, இது தொடர்பாக பல தரப்பினருடன் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மலேசிய கடற்படைக்கு பொருத்தமான புதிய முன்மொழிவுகளைப் பெறுவதற்காக இந்த கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் காலிட் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இம்முயற்சியில் 3 முதல் 4 நாடுகள் வரை தங்களது முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நான்கு முன்மொழிவுகளையும், மலேசிய கடற்படை, விரிவாக மதிப்பீடு செய்து, பின்னர் அவை அரசாங்கத்தின் பரிசீலனைக்காக கொண்டு செல்லப்படும் என துருக்கியின் இஸ்தான்புல் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற மலேசியாவின் முதல்எல்எம்எஸ்பி2 கப்பலான “துங்கு லக்ஷமணா அப்துல் ஜலில்” பெயரிடும் மற்றும் நீரிறக்கும் விழாவில் காலிட் நோர்டின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மலேசிய பேரரசியார் ராஜா ஜாரித் சோஃபியாவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








