இன்று முதல் வாகன உரிமை மாற்றத்திற்கான இணைய சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே அறிவித்துள்ளது.
இந்த தற்காலிக நிறுத்தமானது, பொதுமக்கள் பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் மைஈஜி மற்றும் இஆட்டோ எஸ்டிஎன் பிஎச்டி உள்ளிட்ட ஜேபிஜேவின் அனைத்து வணிகக் கூட்டாளர்களின் டிஜிட்டல் சேனல்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களுக்குத் தெரியாமல் வாகன உரிமை மாற்றம் செய்யப்படுவதாகப் பல புகார்கள் எழுந்ததையடுத்து, இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜேபிஜே தலைமை இயக்குநர் எடி ஃபட்லி ராம்லி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, இன்று மே 25-ஆம் தேதி முதல் தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து வாகன உரிமை மாற்ற செயல்பாடுகளும் நேரடியாக ஜேபிஜே கவுண்டர்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எடி ஃபட்லி தெரிவித்துள்ளார்.








