ஈப்போ, பிப்ரவரி.08-
பினாங்கு, நிபோங் திபால் நகருக்கு வருகை தரும் பயணிகளை வரவேற்கும் வகையில், முன்னங்கால்களைத் தூக்கி ஆக்ரோஷமாகப் பாயத் தயாராகும் நிலையில் உள்ள ஒரு பிரம்மாண்ட குதிரைச் சிற்பம், அந்தப் பகுதியின் புதிய கலை அடையாளமாக உருவெடுத்துள்ளது.
ஜாலான் நிபோங் திபால் சாலையில் அமைந்துள்ள தூண் போன்ற கட்டமைப்பு, நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறி நகருக்குள் நுழையும் வாகன ஓட்டிகளின் கண்களைக் கவரும் வகையில் மிக உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. தொலைதூரத்தில் இருந்தே இதன் கம்பீரம் பயணிகளின் கவனத்தை ஈர்க்கிறது.
சுமார் இரண்டு மாடி உயரத்திற்கு விண்ணை முட்டி நிற்கும் இந்தச் சிற்பம், துருப்பிடிக்காத எஃகு சட்டங்களால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பகலில் சூரிய ஒளியில் மின்னும் இந்தச் சிற்பம், இரவில் விளக்குகளின் ஒளியைப் பிரதிபலித்து ஒரு கண்கவர் வைரச் சிலையைப் போல ஜொலிக்கிறது.
இது குறித்து ஜாவி சட்டமன்ற உறுப்பினர் Jason Hng Mooi Lye கூறுகையில், இந்தச் சிற்பம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி புதன்கிழமை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
தனது முகநூல் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், "ஜாவிப் பகுதி நண்பர்களே, இதோ குதிரை வந்து விட்டது! என்னைப் போலவே சீனப் புத்தாண்டின் 'குதிரை ஆண்டில்' பிறந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?" என உற்சாகத்துடன் கேட்டுள்ளார்.








